எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, காலநிலை மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.
எல் நினோ – தெற்கு அலைவு (ENSO) பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிபுணர்களின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் ஊடாக தேசியக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்த இதன் போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் எல் நினோ மற்றும் லா நினாவினால் வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படலாம். உலகளாவிய ரீதியில் அரிசி, கோதுமை, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவு விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்படக்கூடும்.
வரவிருக்கும் காலப்பகுதியில் வலுவான எல் நினோ நிலைமை காரணமாக, 2026 அல்லது 2027ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை சாதனை அளவை எட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வளரும் நாடுகள் இதனால் மேலதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், சான்றுகளின் அடிப்படையில் நீண்ட கால தேசிய உத்திகளை உருவாக்கி, காலநிலை பின்னடைவுத் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது வலியுறுத்தினார்.
