சுனாமியால் காணாமல் போய் 18 ஆண்டுகளின் பின்னர் மீண்ட பெண்

4 years ago
News in Brief
Sri Lanka
(128 views)
aivarree.com

சுனாமியால் காணாமல் போய் 18 வருடங்களின் பின்னர் 2 பிள்ளைகளின் தாயாகப் பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது தற்போதைய வாழ்க்கை நிலை குறித்து கவலை வெளியிடப்படுகிறது.

18 வருடங்களுக்கு முன்னர் தங்காலை பகுதியில் சுனாமி அனர்த்தத்தினால் குறித்த பெண் காணாமல் போய் இருந்தார்.

தற்போது அவர் மெதிரிகிரிய பிரதேசத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து சர்வதேச மகளிர் தினமான மார்ச் எட்டாம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணுக்கு தமது உண்மையான பெயர், வயது, தாய்தந்தையர் என்று எதுவுமே தெரியாது.

அவருக்கான பிறப்பு சான்றிதழோ அடையாள அட்டையோ எதுவுமே இல்லாமல் வசிக்கிறார். 

அவர் தற்போது கே . ஏ. கமலா பெரரே என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். 

அவர் வசிக்கும் முகவரி ஜயகம்புர, மஹாஅம்பகஸ்வௌ, மெதிரிகிய ஆகும். 

பாடசாலை கல்வியை ஆரம்பிக்கத் தயாராக இருந்த சமயத்தில் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அலையால் அவரது பெற்றோர் மற்றும் 3 சகோதரர்கள் பாதிக்கப்பட்டனர்.

5 வரிகளில் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணையுங்கள். இணைய இங்கே அழுத்தவும்

அவர்களுக்கு என்ன ஆனது? என்று தெரியாது. 

எனினும் யார் என்றே தெரியாத சிலர் குறித்த பெண்ணை சிறுவயதில் காப்பாற்றி, தங்காலையில் உள்ள சுனாமி இடைத்தங்கல் முகாம் ஒன்றில் சேர்த்துள்ளனர். 


பின்னர் தங்காலை பகுதியில் வசித்த பாடசாலை அதிபர் ஒருவர் அவரை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்துள்ளார்.

அதிபரின் வீட்டிலிருந்த சிலர் அவருக்கு கே.ஏ.கமலா பெரேரா எனப் பெயர் சூட்டியுள்ளனர். 


கமலாவுக்கு 12 வயதாக இருக்கும், அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரான பெண் அதிபர் புற்றுநோயால் உயிரிழந்தார்.

பின்னர் கமலா குறித்த அதிபரின் கொழும்பில் உள்ள தங்கையின் வீட்டுக்குச் சென்று அங்கு வீட்டுப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். 

கமலாவுக்கு 14 வயதாக இருக்கும் போது, அவர் வசித்து வந்த கொழும்பு இல்லத்திற்கு மேசன் வேலைக்காக வந்த ஒருவருடன் முதல்நாளே தொடர்பு ஏற்பட்டு, அந்த வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறினார். 

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே தம்மை அழைத்துச் சென்றதாகவும் கமலா கூறுகின்றார். 


சில காலத்தின் பின்னர் அவருக்கு முதலாவது குழந்தை கிடைத்த போது, அவரது கணவர் என்று அறியப்படுகின்றவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி போலியான அடையாள அட்டை ஒன்றைத் தயாரித்துள்ளார். 

எமது வட்சப் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்


எவ்வாறாயினும், கமலா இரண்டு பிள்ளைகளின் தாயான பின்னர், அவரது கணவர் இன்னுமொரு சிறுமியுடன் தொடர்பிலிருந்தமை தெரியவந்துள்ளது. 


இதுதொடர்பாக அவர் காவல்துறையில் முறைப்பாடு செய்த போதும், அதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய காவல்துறையினர், கமலாவிடம் இருந்து “வேறு உபகாரங்களையே” எதிர்பார்த்துள்ளனர்.

 
தற்போது கணவர் கைவிட்டுச் சென்ற நிலையில், தங்குவதற்குக் கூட ஒழுங்கான இடம் ஒன்று இல்லாத நிலையில் பாழடைந்த வீடொன்றில் வசித்து வருகிறார். 


அவருக்கு உதவி செய்ய விரும்புகின்றவர்கள் கே.ஏ.கமலா பெரேரா, மக்கள் வங்கி, 231 2 001 2 00 82578 என்ற வங்கிக் கணக்குக்கு உதவித் தொகைகளை வைப்பிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0773 768474 என்ற தொலைப்பேசி இலக்கத்தை அழைக்கலாம்.


லங்காதீப பத்திரிகையின் உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது. 

அய்வரி செய்தி குழு.