போலி ‘GovPay’ இணையத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

2 hours ago
Sri Lanka
(3 views)
aivarree.com

பயனாளர்களின் பணத்தைத் திருடும் நோக்கில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ‘GovPay’ தளத்தைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

காவல்துறையினரால் விதிக்கப்படும் உடனடி போக்குவரத்து அபராதங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவைகளுக்கான நிகழ்நிலை கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் ‘GovPay’ டிஜிட்டல் தளத்தை ஒத்ததாகவே இந்த போலி இணையத்தளங்கள் மோசடி செய்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கை காவல்துறையின் பெயரில் போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாடு மீறல் அல்லது ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, உத்தியோகபூர்வமற்ற இணைய இணைப்புகள் ஊடாகப் பணத்தைச் செலுத்துமாறு அந்த குறுஞ்செய்திகளில் போலியாகக் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு, சம்பவ இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டிய பின்னரே காவல் அதிகாரிகளால், உடனடி அபராதப் பத்திரம் வழங்கப்படும். அல்லது சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்புக் கேமரா அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, காவல்துறையினர் ஒருபோதும் வங்கி விபரங்களைக் கோரியோ அல்லது உத்தியோகபூர்வமற்ற இணைய முனவரிகள் ஊடாக அபராதம் செலுத்துமாறு கோரியோ குறுஞ்செய்திகளை அனுப்ப மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான இணைத்தளங்களை கிளிக் செய்வதையோ அல்லது உத்தியோகபூர்வமற்ற இணையத்தளங்கள் ஊடாகப் பணம் செலுத்துவதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இத்தகைய மோசடிகளுக்கு இலக்காகியிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.