2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டிகளின் முடிவுகளை மாற்றுவதற்காக , Jaffna Kings அணியின் இணை உரிமையாளரான மன்ஜோத் கல்ரா 30,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை கையூட்டலாக வழங்க முயன்றதாக விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மன்ஜோத் கல்ரா மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, வழக்கின் விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த புலனாய்வு அதிகாரிகள், மன்ஜோத் கல்ரா போட்டிகளைத் தமக்கு சாதகமாக மாற்றுவதற்காக பானுக ராஜபக்ஷ, துனித் வெல்லாலகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ உள்ளிட்ட பல எல்.பி.எல் வீரர்களை அணுகியதாகத் தெரிவித்தனர்.
எனினும், குறித்த கிரிக்கெட் வீரர்கள் இது குறித்து உடனடியாக விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைப் பிரிவினரின் ஆலோசனையின் பேரில் வீரர்கள் செயற்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் பேசப்பட்ட நிதிச் சலுகை பின்னர் 11.5 மில்லியன் ரூபாவாக உடன்பாட்டுக்கு வந்துள்ளதுடன், அதில் 9.5 மில்லியன் ரூபாவை முன்பணமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு 9.5 மில்லியன் ரூபா பணத்தை கறுப்பு நிற பையொன்றில் எடுத்துக்கொண்டு இரண்டாவது சந்தேகநபர் வந்தபோது, அங்கு மறைந்திருந்த காவல் அதிகாரிகள் இரு சந்தேகநபர்களையும் கையாடல் பணத்துடன் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை புலனாய்வாளர்கள் பதிவு செய்துள்ளதோடு, அவை முத்திரையிடப்பட்ட ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தனர்.
மன்ஜோத் கல்ரா கையூட்டல் கொடுத்ததற்கோ அல்லது வழங்கியதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், சந்தேகநபர்கள் இலங்கையில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காகவே வருகை தந்தனர் எனவும் தெரிவித்து பிணை கோரினர்.
எனினும், இந்த கட்டத்தில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் அது தற்போதைய விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவதானித்த தலைமை நீதவான், சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
