தனியார் மருத்துவ ஆய்வுகூடங்களில் காலாவதியான பொருட்கள் மீட்பு: நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை

3 hours ago
Sri Lanka
(3 views)
aivarree.com

இலங்கை முழுவதும் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது, காலாவதியான மற்றும் பயன்பாட்டிற்குப் பொருத்தமற்ற மருத்துவ ஆய்வகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 52 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது பயன்பாட்டில் உள்ள பொருட்களுடன் காலாவதியான ஆய்வகப் பொருட்களைச் சேமித்து வைத்திருந்தமை உள்ளிட்ட கடுமையான விதிமீறல்கள் பல நிறுவனங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

இரத்த குளுக்கோஸ் பரிசோதனை கருவிகள், ஆய்வக இரசாயனங்கள், டெங்கு நோய் கண்டறியும் கருவிகள், இதய நோயாளிகளுக்கான ஜெல் (gels), சாயக் கரைசல்கள் மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகளுக்கான நுகர்வுப் பொருட்கள் பயன்பாட்டிற்குப் பொருத்தமற்றவையாகக் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறான நாடு தழுவிய பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.