சச்சினின் சாதனையை முறியடித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி

3 months ago
tamilnewsline.com

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இந்திய அணியில் அறிமுகமாகி, மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

எனினும், தனது அறிமுகப் போட்டியிலேயே ‘ஸ்டம்பிங்’ முறையில் ஆட்டமிழந்த முதலாவது இந்திய வீரர் என்ற துரதிர்ஷ்டவசமான சாதனையையும் அவர் பதிவு செய்தார்

இந்த போட்டியில் 10 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 ஆறு ஓட்டங்களுடன், 14 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், வில் ஜேக்ஸின் (Will Jacks) பந்துவீச்சில் அவர் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டமிழக்க, ஓட்டங்கள் ஏதுமின்றி 1 ஓட்டத்திற்கு 2 விக்கெட்டுகள் எனத் தடுமாறியது.

எனினும், ஹரி புரூக் அதிரடியாக 12 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஜேகப் பெத்தல் (Jacob Bethell) 46 பந்துகளில் 76 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை அடைந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 1-0 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.