2027ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் விபரங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஏ. எச். எம். எச். அபேரத்னவின் கையொப்பத்துடன் 2493/05 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்லினப் பண்பாட்டு மற்றும் மத சமூகங்களுக்கிடையில் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விடுமுறைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வழிபாட்டு நாட்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் உள்ளடக்கப்பட்டு இந்த விடுமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி,
தமிழ் தைப்பொங்கல் தினம்: ஜனவரி 15
தேசிய சுதந்திர தினம்: பெப்ரவரி 04
சிங்கள, தமிழ் புத்தாண்டுத் தினம்: ஏப்ரல் 14
மே தினம் : மே 01
விசாக பூரணை தினம்: மே 19
தீபாவளித் திருநாள்: ஓக்டோபர் 28
நத்தார் தினம்: டிசம்பர் 25
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால பாரம்பரியத்திற்கு இணங்க, 2027ஆம் ஆண்டிலும் அனைத்து பௌர்ணமி போயா தினங்களும் அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ வர்த்தமானியை அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள www.documents.gov.lk முகவரியூடாகப் பொதுமக்கள் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
