இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று கனிமொழியின் இல்லத்தில் நடைபெற்றது.
இலங்கை அரசு கொண்டுவர முயலும் ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தடுத்து, தமிழர்களின் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி இந்திய மத்திய அரசு ஊடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இதன் போது வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், செம்மணியில் அண்மையில் 427 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசு இதனைத் திரிபுபடுத்த இடமளிக்காமல், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை குறித்து உடனடி சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டிய அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்திய – இலங்கை மீனவர் முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு, அத்துடன் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல், ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க திமுக ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோரிக்கைகளைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஈழத் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், திமுக தலைவர் நாடு திரும்பியதும் இது குறித்துப் பேசி, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவித்தார்.
