வழிமறித்து பணம் கேட்ட கும்பல்: மறுத்த மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

5 hours ago
Sri Lanka
(5 views)
aivarree.com

குருநாகல் பகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த ஜூன் 25ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயம்ப தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கும், பமுனுகெதர பகுதியில் தங்கியிருந்த 19 வயதுடைய இரு மாணவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமது விடுதிக்குச் சென்றுகொண்டிருந்த போது, வழிமறித்த கும்பல் ஒன்று 100 ரூபாய் பணம் கேட்டுள்ளது. அதனை மாணவர்கள் மறுக்கவே, ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து மாணவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, குருநாகல் காவல்துறையினரால் இரு விசேட புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, கடந்த ஜூன் 30ஆம் திகதி 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என அடையளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதக் கூட்டமாக ஒன்றுகூடி பலவந்தமாகப் பணம் பறிக்க முயன்றமை மற்றும் இருவருக்குக் காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் TVS ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் சான்றுப் பொருளாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குருநாகல் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.