தாய்லாந்தில் பெரும் சோகம்: 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனத்தில் மோதி 9 பௌத்த துறவிகள் பலி!

3 months ago
tamilnewsline.com

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில் (Mukdahan) யாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த துறவிகள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஓட்டி வந்த வாகனம் மோதியதில் 9 துறவிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த 35 பௌத்த துறவிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் சிலர், உபோன் ரட்சதானி மாகாணம் நோக்கி சுமார் 260 கிலோமீற்றர் தூர பாதயாத்திரையை ஆரம்பித்து வீதியின் ஓரமாக வரிசையாகச் சென்றுகொண்டிருந்தனர்.

யாத்திரை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 30 நிமிடங்களில் பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து துறவிகளின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த மேலும் 13 பேர் முக்தஹான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவன் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.