தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

2 months ago
Sri Lanka
(48 views)
aivarree.com

அனுராதபுரம் – தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களின் நீண்டகாலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைக்கப்பட்ட ‘தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம்’, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

சீன அபிவிருத்தி வங்கியின் சலுகைக் கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடன் மறுசீரமைப்புச் செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், இதன் தேசிய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு நிதியையும் பயன்படுத்தி, பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

32 பில்லியன் ரூபா செலவில், நாளொன்றுக்கு 18,000 கன மீற்றர் நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், இந்த பகுதியில் வேகமாகப் பரவி வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்குத் தீர்வு காண்பதுடன், 25,000 வீடுகளுக்குப் புதிய நீர் இணைப்புகளை வழங்கவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.