இலங்கையின் தொன்மைச் சின்னங்களுக்கு தேசிய பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்

1 day ago
Sri Lanka
(10 views)
aivarree.com

இலங்கையில் தொல்பொருளியல் வாரத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு, நாடு தழுவிய ரீதியில் உள்ள 1,000 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

“பாரம்பரியத்துக்கு உயிர் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை தொல்பொருளியல் வாரம் நடத்தப்படுகின்ற நிலையிலேயே இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக, அடையாளம் காணப்பட்ட 100 முக்கியமான தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி, முறையான ஆய்வுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ‘சமூகப் பாதுகாப்பு குழுக்கள்’ அமைக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளும் தொல்பொருள் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.