ஊழல் வேட்டையில் சிக்கிய ஈராக் எம்.பி – கோடிக்கணக்கான பணமும், தங்கமும் பறிமுதல்!

7 hours ago
World
(3 views)
aivarree.com

ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிந்த் அல்-அப்பாசி (Hind al-Abbasi) வீட்டின் மீது நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், பல மில்லியன் டொலர் ரொக்கம் மற்றும் பல கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஈராக் நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தீவிர ஊழல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிந்த் அல்-அப்பாசியின் பாக்தாத் இல்லத்தில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சொகுசுப் பொருட்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்னன.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கப்பணம், சுமார் 27 கிலோகிராம் எடையுள்ள தூய தங்கம் மற்றும் தங்கத் தகடு பதிக்கப்பட்ட ஆடம்பர உள்ளாடைகள் என்பன அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டு வரும் இந்த ஊழல் ஒழிப்பு சோதனையில், இதுவரை பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிந்த் அல்-அப்பாசி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த அளப்பரிய சொத்துக்கள், ஈராக் அரசியலில் நிலவும் ஊழலின் உச்சக்கட்டத்தை காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.