அக்குரேகொட பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்பாக சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சிஹின தில்சர என்பவர், மாலைதீவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலங்கை காவல்துறையின் விசேட குழுவொன்றினால் அவர் இன்று (04) மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
காலி, படபொல, எத்கந்துர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேகநபர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்த மகிழுந்தின் சாரதியாக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாலைதீவின் மாலே நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-116 என்ற விமானம் மூலம் சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
