74ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை

4 years ago
News in Brief
(51 views)
aivarree.com


”அதி வணக்கத்துக்குரிய மஹா சங்கத்தினர்களே,
ஏனைய வணக்கததுக்குரிய மதகுருமார்களே,
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதம நீதியரசர் அவர்களே,
கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே,
கௌரவ அமைச்சர்களே, கௌரவ ஆளுநர்களே,
கௌரவ இராஜாங்க அமைச்சர்களே,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,
கௌரவ தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே,
ஜனாதிபதியின் செயலாளர் அவர்கள் உள்ளிட்ட
அனைத்து அரச உத்தியோகத்தர்களே,
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி அவர்களே,
கடற்டைத் தளபதி அவர்களே, விமானப்படைத் தளபதி அவர்களே,
பொலிஸ் மா அதிபர் அவர்களே,
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களே,
விருந்தினர்களே, படை வீரர்களே,
இலங்கையின் அனைத்துச் சகோதர, சகோதரிகளே,
அன்புப் புதல்வர்களே, புதல்விகளே,

சுதந்திரமான ஒரு நாட்டின் கௌரவம்மிக்க ஒரு பிரஜையாக வாழ்வதற்குள்ள உரிமையை முன்னிட்டு, வரலாறு முழுவதும் பல நாடுகளின் மக்கள் கலவரங்களை நடத்தியுள்ளார்கள். போர்களை முன்னெடுத்துள்ளார்கள். பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார்கள். இலங்கையிலும், 2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பல காலப்பகுதிகளில், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய துட்டகைமுனு, வலகம்பா, மஹா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டு நாட்டை ஒன்றுபடுத்தினார்கள்.

இறுதியாக, ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரும் கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடொன்றினூடாக இந்நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முயன்றமைக்கு எதிராகப் போராடவும் எமக்கு நேர்ந்துவிட்டது.

இன்று இலங்கையானது ஒரு சுதந்திரமான இறைமை பொருந்திய ஜனநாயக நாடாகும். நாம் அதன் அபிமானம் கொண்ட பிரஜைகளாவோம்.
வரலாறு முழுவதும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டுக்கு முழுச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அர்ப்பணிப்புடன் முன்னின்ற நாட்டுப் பற்றுடையவர்கள் எல்லோருக்கும் நான் இவ்வேளையில் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன்.

இனம், மதம் என்ற எவ்வித பேதங்களுமின்றி ஒவ்வோர் இலங்கைப் பிரஜைக்கும் இன்று நாட்டின் எப்பிரதேசத்திலும் சுதந்திரமாகவும் பாதுகாப்புடன் வாழும் உரிமையுண்டு. தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரமும் உள்ளது. அபிப்பிராயங்களைச் சுயாதீனமாக முன்வைப்பதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. நாட்டினுள் முழுமையாக ஊடகச் சுதந்திரம் இருக்கின்றது.

இலங்கைப் பிரஜைகள் பரிபூரணமாக ஜனநாயக முறைமையொன்றினூடாகத் தத்தமது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்கும் விரும்பியவர்கள் அரசியல் செயற்பாட்டினூடாக அரச ஆட்சியில் சம்பந்தப்படுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. இது, எம் அனைவரது மகிழ்ச்சிக்கும் அபிமானத்துக்கும் உரியதொரு காரணமாகும்.

சுதந்திரமிக்க ஜனநாயக ரீதியிலான நாடொன்றின் மக்கள் என்ற வகையில், நாம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பது போன்று பொறுப்புகளும் இருக்கின்றன.

எல்லோரும் நாட்டுக்காகத் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சகட்டப் பயன் கிடைக்கும். பொறுப்புகளை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.

ஒரு நாடானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடையும் போதே, அந்நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமுள்ளதாக அமைகிறது. அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம் அரசைப் போன்று மக்களுக்கும் உள்ளது.

ஒரு நாட்டை உரிய திசையை நோக்கிக் கொண்டுசெல்லும் போது, அதற்காக நாட்டின் அனைவரது உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

மாற்றமடையாதோருக்காகக் காத்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நாம் திட்டமிட்டுள்ளவற்றைக் கைவிட நாம் தயாரில்லை. எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்கமுறையான சிந்தனையின் மூலம் மட்டும் தான், நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றிகரமானதொரு பயணத்துக்கு வேண்டிய அர்ப்பணிப்புகளைச் செய்தால் மட்டும் தான், நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும்.

எதிர்மறையான சிந்தனையுடையவர்கள் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை. ஒரு பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை.

ஒரு நாட்டின் தலைவர், அநேகமான கஸ்டங்கள், அனர்த்தங்கள், பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரே நோக்கை நோக்கிக் குழுவொன்றை வழிநடத்துவது இலகுவானதல்ல. எவ்வளவு நல்ல நோக்கமாக இருப்பினும், நடைமுறையில் இருக்கின்ற முறைமைகளை மாற்றுவது இலகுவானதல்ல. சில விடயங்களில், உள்நாட்டைப் போன்று அந்நிய சக்திகளும் எம்மை எதிர்த்து ஒன்றுகூடுகின்றன. சிலவேளை உங்களது பக்கத்தில் நிகழும் செயல்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக நடக்கும் சதியாகத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

மக்கள் தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இவ்வனைத்துப் பிரச்சினைகளையும் முகாமைத்துவம் செய்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தவிர பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவதல்ல. அதற்குத் தேவையான ஆக்கமுறையான உளப்பாங்கு எம்முள் இருக்கின்றது. நாடு எதிர்கொள்கின்ற எந்தவொரு சவாலையும் வெற்றிகாண்பதற்காகத் தலைமைதாங்க நான் எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன்.

ஆக்கமுறையான கருத்துகளைக் கொண்டுள்ள, எதிர்காலம் பற்றிய நல்ல கனவுகளைக் கண்டு அவற்றை அடைய முயன்றவர்கள் தான் உலகை மாற்றியிருக்கிறார்கள். வரலாறு முழுவதிலிருந்தும் இது நமக்குத் தென்படுகிறது.

நாட்டுத் தலைவருக்கும் மக்களுக்கும் இருக்கும் ஆக்கமுறையான சிந்தனையே, முன்னேறிய ஒவ்வொரு நாட்டினதும் உயர்வுக்குக் காரணமாகியுள்ளது.

புராதன காலத்திலிருந்த எமது மன்னர்கள், ருவன்வெலிசாய, ஜேத்தவனாராமய மற்றும் அபயகிரி போன்ற விசாலமான நிர்மாணங்களை, ஆக்கமுறையான சிந்தனைகளின் மூலம் தான் செய்தார்கள். மின்னேரியா குளம், கலா வாவி, பராக்கிரம சமுத்திரம் மற்றும் யோத எல போன்ற நிர்மாணங்களைச் செய்த தலைசிறந்த நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் அன்று எமக்கு இருந்தது. சீகிரியா போன்ற நகர நிர்மாணிப்புகள் இன்றும் உலகை ஆச்சரியப்படுத்துகின்றன.

இலங்கையானது, பண்டைய கால உலகின் பகிரங்கமானதொரு கப்பல் மையமாக இருந்தது. அன்று எமக்கு அப்படியானவற்றைச் செய்யும் இயலுமை இருந்திருந்தால் வருங்காலத்திலும் உலகுடன் போட்டியிடும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும். அதற்கு இன்றியமையாத காரணியாக அமைவது நாம் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைதான்”.

Reported by
Editorial Reporter