சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸின் (Damascus) மையப்பகுதியில் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக சிரிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டமாஸ்கஸில் உள்ள நீதி அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள உணவகமொன்றிலேயே இந்த வெடிபொருள் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் பிரிவினர் அப்பகுதியை முற்றுகையிட்டு சோதனைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
