ஜனாதிபதி கோட்டாவின் கொள்கை விளக்க உரை சாரம்

4 years ago
(83 views)
aivarree.com

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்க வில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார். 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார். 


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும், இன்னும் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கூறினார். 


முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய விடுவிப்பதற்குக் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.


எதிர்காலத்திலும் அவ்வாறான பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பயங்கரவாத தடை சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


அதேநேரம் அரசியல் லாபத்துக்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோரினார். 


வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை தற்காலிகமாகவேனும் ஒதுக்கி வைத்து, அந்த பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மக்களுக்கு ஏற்புடைய புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவு படுத்தப்படும். 
விவசாயத்துறையில் மேலும் பலனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடுகள் இடம்பெறும். 

விவசாயத்துறையில் தாம் பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. 
அனைவரும் இணைந்து விவசாய புரட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது.


இதற்கான அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும். 
இதற்காக நாட்டை நேசிக்கின்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

120 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க சக்திவள மின்னுற்பத்திக்கான வேலைத்திட்டம் இடம்பெறுகிறது. 


மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.


நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. 
மின்னுற்பத்திக்காக 21 சதவீதமும், கைத்தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுகிறது.


எனவே எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

 
எக்காரணம் கொண்டும் புதிதாக நிலக்கரி மின்னுற்பத்தி மையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.