வாகன இறக்குமதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மேலதிக கட்டணம் காரணமாக, நாட்டுக்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் வீதத்தில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி நடவடிக்கைகள் வழமை போன்று உச்சமடைந்திருந்த காலப்பகுதியில், நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 450 வரையான இறக்குமதிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சில நாட்களில் இந்த பதிவுகளின் எண்ணிக்கை 800 வரையும் உயர்ந்திருந்தது.
எவ்வாறெனினும், புதிய மேலதிக கட்டண விதிப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், தினசரிப் பதிவுகளின் எண்ணிக்கை தற்போது 300 முதல் 350 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரதான வாகன முகவர்களினால் ஒரு இறக்குமதிப் பதிவின் கீழ் ஒரே தடவையில் 50 – 100 அல்லது அதற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை நாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியும். இதனால், பதிவுகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியானது ஒட்டுமொத்த வாகன இறக்குமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய, விதிக்கப்பட்ட மேலதிக கட்டணத்தின் விளைவாக தற்சமயம் வாகன இறக்குமதி அளவு பெருமளவில் குறைந்துள்ளமை தெளிவாகப் புலனாவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
