அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2025ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி (Crypto Currency) வர்த்தகம் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அவரது கட்டாய நிதி அறிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, அவர் ஆரம்பித்த “ட்ரம்ப் மீம் நாணயம்” (Trump Meme Coin) மூலம் 635 மில்லியன் டொலர்களும், தனது மகன்கள் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் பிள்ளைகளால் நிறுவப்பட்ட “வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல்” நிறுவனம் மூலம் 500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தையும் அவர் பெற்றுள்ளார்.
அத்துடன், மார்-எ-லாகோ மன்றம் (Mar-a-Lago Club), கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ட்ரம்ப் வர்த்தக நாமத்திலான பைபிள், கடிகாரங்கள், பாதணிகள் போன்ற பொருட்களின் விற்பனை ஊடாகவும் அவருக்குப் பல கோடி டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலேனியா ட்ரம்ப், தனது ஆவணப்படம் மூலம் 10.7 மில்லியன் டொலர்களையும், என்.எஃப்.டி விற்பனை மூலம் 6 மில்லியன் டொலர்களையும் ஈட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், ஏபிசி , சிபிஎஸ் , மெட்டா , யூடியூப் , எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளின் மூலம் ட்ரம்பிற்குப் பல கோடி டொலர்கள் இழப்பீடாகக் கிடைத்துள்ளன.
எனினும், அந்தத் தொகை பெரும்பாலும் அவரது வருங்கால ஜனாதிபதி நூலகம் மற்றும் பூங்கா பராமரிப்புப் பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் பதவியைப் பயன்படுத்தித் தனிப்பட்ட லாபம் ஈட்டவில்லை எனவும், இதில் எவ்வித நலன் முரண்பாடுகளும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவை “உலகின் கிரிப்டோ தலைநகராக” மாற்றியதையிட்டு ட்ரம்ப் பெருமிதம் கொள்வதாகவும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக, பிட்காயின் வர்த்தகத்தை “மோசடி” மற்றும் “பேரழிவு” என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
