பொருளாதார வளர்ச்சியை 8% வரை உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு: ஜனாதிபதி

4 hours ago
Sri Lanka
(6 views)
aivarree.com

தற்போது 5% மட்டத்திலுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7% – 8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டில் மூலதனச் செலவாக 2 ட்ரில்லியன் ரூபாவை ஒதுக்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம் ஏற்படும் டொலர் தேவையை ஈடுசெய்ய ஏற்றுமதித் துறையின் அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருமானத் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் வருடத்திற்கு 5 பில்லியன் டொலர்களையும், மின் மற்றும் இலத்திரனியல் துறை மூலம் 2 பில்லியன் டொலர்களையும் ஈட்டும் சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன், இத்துறைகளை உலகளாவிய வர்த்தகநாமமாக மாற்றுவதற்கும், எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மெய்நிகர் விசேட பொருளாதார வலயம் மற்றும் தரவு மையத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள், சுங்கத் தடைகளை நீக்குவதற்கான “Green Channel” முறைமை மற்றும் வங்கி முறைமையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்