ஐரோப்பியக் கண்டத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் வீசிய கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் மாத்திரம் ஒரே வாரத்தில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் ஜூன் இறுதி வாரத்தில் மரணங்கள் 29 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாரிஸ் பிராந்தியத்தில் மாத்திரம் இறப்புகள் 62 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.
கடந்த ஜூன் 24 அன்று பாரிஸில் வெப்பநிலை 41 பாகை செல்சியஸைத் (41°C) தொட்டதை அடுத்து, நாட்டின் பல பகுதிகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, வெப்ப அலையின் காரணமாக பெல்ஜியத்தில் 1,222 பேரும், நெதர்லாந்தில் 480 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாவர். அத்துடன், பிரான்சில் வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற 72 பேர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.
அத்துடன், பிரித்தானியா, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த வார இறுதியில் கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா காணப்படுவதற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
