tamilnewsline

சிறைச்சாலைகளில் பதற்றம்: குருவிட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழப்பு; 13 பேர் காயம்

குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 13 கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு பள்ளன்சேனை சிறைச்சாலையிலும் ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் பிரிவினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருவிட்ட மற்றும் பள்ளன்சேனை சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த காவல்துறை, விசேட அதிரடிப்படை (STF), கலவரத் தடுப்புப் பிரிவு, இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவி பெறப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இரு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியின்மை பின்னர் குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பள்ளன்சேனை சிறைச்சாலைகளுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டதுடன், சில பகுதிகளில் இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் விமானப்படையின் ஆளில்லா விமான கண்காணிப்பும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் தங்களது அறைகளிலிருந்து வெளியேறி அமைதியின்மையில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version