தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அரசியல் கட்சிகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை வழங்குமாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை அறிவித்திருந்த குறித்த கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் தொடர்ந்து இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும் பேணிக்கொண்டே, இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமாக இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக வும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடல்கள் மூலம் பரந்த இணக்கப்பாட்டை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள கட்சிகள், நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வை நோக்கி இணைந்து செயல்படுவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
இந்தக் கூட்டறிக்கை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , இலங்கைத் தமிழரசுக் கட்சி , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் , ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சார்பில், குழுவின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கம் சாணக்கியன் வெளியிட்டுள்ளார்.
