tamilnewsline

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

தமிழ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ,தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்றையதினம் சென்னையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த மு. க. ஸ்டாலின், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் நினைவூட்டப்பட்டன.

அத்துடன், இலங்கையின் ஒற்றையாட்சி முறையை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய மத்திய அரசுக்குத் தேவையான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக தமிழர்களின் தேசம், தனித்துவமான மக்கள் அங்கீகாரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சமஷ்டி ஆட்சி கட்டமைப்பிலான அரசியல் தீர்வை ஏற்படுத்த இந்தியா உறுதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய பேரவை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கனகரத்தினம் சுகாஷ், பொ.ஐங்கரநேசன், கே.வி.தவராசா மற்றும் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version