புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டணியின் பிரதிநிதிகள், இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள், காணி உரிமைகள், வீடமைப்பு மற்றும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகள், மலையகத் தமிழ் மக்களின் சமூக-பொருளாதார சவால்கள் மற்றும் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என குறித்த கூட்டணி இதன்போது வலியுறுத்தியது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் முறைமை குறித்த பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவுடன் கலந்தாலோசித்து நிலுவையில் உள்ள விடயங்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது புதிய அரசியலமைப்பை அவசரமாக உருவாக்கக் கூடாது என்றும், அது அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் பரந்த தேசிய கலந்துரையாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் போல் ஒரு அரசியல் கட்சியின் விருப்பத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், அதற்கு முன்பாக அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் பரந்த தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதே தற்போதைய முன்னுரிமை என அவர் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் இன அடையாளங்களை விட “இலங்கையர்கள்” என்ற அடையாளத்துடன் வாழும் நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் ஆட்சிமுறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட ஊழியர்களுக்கு 10 பேர்ச்சு பரப்பளவுள்ள குடியிருப்பு காணிகளின் சட்டபூர்வ உரிமையை வழங்கும் அரசாங்கத்தின் திட்டமும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன், 2042ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசுடனான தோட்டக் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் போது, தோட்ட மக்களுக்கு குடியிருப்பு காணி உரிமையை வழங்கும் சட்டப்பிரிவுகள் அதில் இணைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மத்திய மலைநாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்கள் வசிக்காத பகுதிகளிலும் நிலச்சரிவுகள் பதிவாகி வருவதாகக் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மலையக மக்களின் அபிவிருத்தித் தேவைகளையும் சமநிலைப்படுத்தும் வகையில் இதற்கென விசேட அதிகாரசபை ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
