இந்தியாவின் தனுஷ்கோடியில் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, விரைவில் காவல்துறை குழுவொன்று இந்தியா செல்லவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும், அண்மையில் வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் கடந்த ஜூலை 23ஆம் திகதி மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடியை சென்றடைந்ததாகவும், அந்தப் பயணத்திற்காக மூன்று இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய ஊடகங்களின்படி, தற்போது இருவரும் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், வத்தளையில் ‘குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அண்மைய துப்பாக்கிச்சூட்டுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளில், கணேசன் விக்னேஸ்வரன் ஏழு முறை இந்தியாவிற்கும், மலேசியா, பிரான்ஸ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு முறை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டு அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் 2018ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் வத்தளை பொலிஸாராலும், 2020ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினராலும் கைது செய்யப்பட்டிருந்தார்.
மற்றைய சந்தேகநபரான மகேஸ்வரன் லூசிநாத், 2016ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
