விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில், தனது சகோதரி வீணஸ் வில்லியம்ஸுடன் இணைந்து விளையாடவிருந்த செரீனா வில்லியம்ஸின் எதிர்பார்ப்பு, முழங்கால் காயம் காரணமாக தற்போது நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆல் இங்கிலாந்து மன்றத்தில் ஆறு முறை இரட்டையர் பட்டம் வென்றுள்ள இந்த உலகப் புகழ்பெற்ற சகோதரிகள், மீண்டும் கிராண்ட்ஸ்லாம் ஆடுகளத்தில் இணையவிருந்த நிலையிலேயே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒற்றையர் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, செரீனா வில்லியம்ஸ் இப்போட்டியில் பங்கேற்பாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து செரீனாவின் முகவர் ஜில் ஸ்மோலர் கூறுகையில், “போட்டியின் முதலாவது பகுதியின் இறுதியில் செரீனா தனது வலது முழங்காலில் காயமடைந்தார். இதனால், விம்பிள்டன் மற்றும் டபிள்யூ.டி.ஏ (WTA) மருத்துவக் குழுக்களின் அறிவுறுத்தலின்படி, அவரது ஊடக சந்திப்புகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மாயா ஜாயின்டிடம் விளையாடியபோது செரீனாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டது
தீவிர மருத்துவப் பரிசோதனைகளின் பின்னரே அவர் விளையாடுவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டையர் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், செரீனாவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் மற்றும் டென்னிஸ் உலகம் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
