பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட சரித் வசந்த குமார அபேசிங்க

5 hours ago
Sri Lanka
(6 views)
aivarree.com

பிணையில் விடுவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமார அபேசிங்க, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நபருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபாய் கையூட்டல் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் இயங்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வருஷஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோர், நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளின்படி திறந்த நீதிமன்றத்தில் பிணைத் தொகையை செலுத்தியுள்ளனர்.

எனினும், சரித் வசந்த குமார அபேசிங்கவால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத நிலையில், இன்று மாலை சுமார் அவர் மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒவ்வொரு சந்தேகநபருக்கும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தன.

மேலும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கும் உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.