இந்துக்கள் தங்களது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு சர்வதேச இந்துமத பீடம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரவுள்ள ஆடி அமாவாசை தினத்தை இவ்வாறு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
ஆடி மாத அமாவாசை தினத்தில் இந்து மக்களால் முன்னோர்களுக்கு பிதிர் கடன்கள் செலுத்துவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
இந்த புனித நாளில் இந்துக்கள் விரதமிருந்து, நீர்நிலைகளுக்கு அருகில் எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்து, தான தர்மங்களுடன் சிவ வழிபாடு மேற்கொள்வது வழமையாகும்.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் இந்த முக்கிய நாளில், இந்து அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டால் அது இந்து மக்களுக்குச் செய்யும் பெரும் கௌரவமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தின் பிரதிகள் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் ஹமகெதர திசாநாயக்க, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், வைத்தியர் பவானந்தமூர்த்தி, இளங்குமரன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாபுசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
