tamilnewsline

ஈழத் தமிழர் அரசியல் உரிமைகள் குறித்து தமிழ்நாட்டில் மீண்டும் வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட அந்த கட்சியின் தலைவர்களை, தமிழ் தேசியப் பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் சமகால முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழ்த்தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியன அங்கீகரிக்கப்படும் அடிப்படையிலான சமஷ்டி அரசியல் தீர்விற்கு இந்திய அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தமிழர் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன்,இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைதாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும், தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மற்றும் உரிமைகள் மேம்பாடு குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி குழுவொன்றை அமைத்து, ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையும் ஈழத் தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

Exit mobile version