அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துறையில் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அலுவலகம் நாளை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பது, அரச ஊழியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்துவது மற்றும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகள் வழங்குவது ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெறும் நடவடிக்கையும் நாளை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
