tamilnewsline

உரிமம் பெறாத 146 ஒன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்க உத்தரவு

இலங்கையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த உரிமம் பெறாத 146 ஒன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத ஒன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், இலங்கையில் உள்ள பயனர்கள் குறித்த இணையதளங்களை அணுகுவதைத் தடுப்பதற்குமான நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணையச் சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயல்படும் சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணையம் வழங்கிய அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக TRCSL தெரிவித்துள்ளது.

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் ஒன்லைன் சூதாட்ட சேவைகளை நடத்துவதோ அல்லது அவற்றை ஊக்குவிப்பதோ, குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதுடன், 44 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதும், அனுமதியின்றி இயங்கும் நிறுவனங்கள் இலங்கையில் சேவைகளை வழங்குவதைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version