tamilnewsline

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: “பொறுப்பை நானே ஏற்கிறேன்” – நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல் சம்பவம் தனக்குப் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், மனித உயிர்கள் பலியாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

“உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையிட்டு நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, இதுபோன்றதொரு சம்பவம் இனிமேலும் நடக்காதிருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், யாரேனும் ஒரு தனிநபர் மீது பழி சுமத்துவதை விடுத்து, உண்மைகளைக் கண்டறிந்து இனிமேல் இவ்வாறான தவறுகள் நிகழாமல் தடுப்பதே தனது முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.

Exit mobile version