tamilnewsline

அமெரிக்கக் குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்தே முதலீட்டு வாய்ப்பு – ட்ரம்பின் புதிய திட்டம்!

புதிதாகப் பிறக்கும் அமெரிக்கக் குழந்தைகளுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் “டிரம்ப் கணக்குகள்” திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளில் தலா 1,000 டொலர்களை அரசாங்கம் வைப்புச் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து நியூயோர்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி இந்த திட்டத்தை முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.

2025 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறக்கும் அமெரிக்கக் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, நீண்ட கால வளர்ச்சிக்கு உகந்த பங்குச் சந்தை நிதியங்களில் தானியங்கி முறையில் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகள் 18 வயதை அடையும் போது இந்த கணக்கைத் தன்வசப்படுத்தி, பணத்தை விலக்கிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து முதலீடு செய்யவோ முடியும். பணத்தை விலக்கிக் கொள்ளும் போதே வரிகள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விசா (Visa), டெல் (Dell), கொம்கொஸ்ட் (Comcast) உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், மைக்ரோன் (Micron) நிறுவனம் 250 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க முன்வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்த திட்டம் ஏழைக் குழந்தைகளுக்கும் கணிசமான நிதிச் சொத்துக்களை வழங்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version