தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது ஈழத்தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் தமிழக முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம்.
ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவைப்பாடு.
இந்திய-ஈழத் தமிழ் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள்.
இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.
போான்ற விடயங்கள் தொடர்பாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் மற்றும் சட்டத்தரணிகளான கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
