2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள், ஜூலை 3ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இணையவழியூடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அனைத்து விண்ணப்பங்களும் இணையவழி முறைமை ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக இணையத்தளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் அச்சுப்பிரதி ஒன்றை எதிர்காலத் தேவைக்காக வைத்திருக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுயாதீனமாக இணையவழியூடாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்துவது கட்டாயமாகும்.
தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள, அறிவுறுத்தல்களைத் தெளிவாக வாசித்து, துல்லியமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்கள் அல்லது சந்தேகங்கள் காணப்படின், 0112 784 208 / 0112 784 537 / 0112 785 922 தொலைபேசி இலக்கங்கள் மற்றும் gceolexamsl@gmail.com மின்னஞ்சல் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
