tamilnewsline

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைக்கப்பட்ட விவகாரத்தில், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (03) கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு, போதிய கல்வித் தகைமைகள் இல்லாதிருந்த போதிலும் யோஷித ராஜபக்ஷவை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைத்தமை மற்றும் அரச நிதியைச் செலவழித்து அவரை பிரித்தானிய ரோயல் கடற்படைக் கல்லூரியின் பயிற்சிக்கு அனுப்பியமை மூலம் ஊழல் புரிந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யோஷித ராஜபக்ஷவிற்காக தகைமை விதிகள் மாற்றப்பட்டு, பத்திரிகை விளம்பரங்கள் செய்யப்பட்டதாகவும் ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியது.

அக்காலப்பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக முப்படைகளுக்கும் அதிகாரிகள் தேவைப்பட்டனர் என்றும், ஜனாதிபதியின் மகன் கடற்படையில் இணைந்தது மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது என்றும் வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபரை தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version