tamilnewsline

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:பூஜித ஜயசுந்தர மற்றும் நிலாந்த ஜயவர்தனவின் மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டு வழக்குகள், காவல்துறை கட்டளைச் சட்டத்தின்படி காலாவதியாகிவிட்டதாகக் கூறி, ஆரம்பத்திலேயே தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் விடுத்த கோரிக்கைகளை நீர்கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களினால் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 182 இழப்பீட்டு வழக்குகளை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யுமாறு பிரதிவாதிகள் தரப்பில் முதற்கட்ட ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற காவல்துறை கட்டளைச் சட்ட விதியை சுட்டிக்காட்டி பிரதிவாதிகள் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.

எனினும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடக அறிக்கைகள் மூலமே பிரதிவாதிகளின் பொறுப்புக்கூறல் குறித்து முறைப்பாட்டாளர்களுக்குத் தெரியவந்தது என்றும், அதன் பின்னரே உரிய காலத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் முறைப்பாட்டாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விடயத்தை முதற்கட்ட சட்டப் பிரச்சினையாகக் கருதி விசாரிக்க முடியாது எனவும், வழக்கு விசாரணையின் சாட்சியங்கள் மூலமே இதனைத் தீர்மானிக்க முடியும் எனவும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

மாவட்ட நீதிமன்றத்தின் குறித்த உத்தரவை உறுதி செய்த நீர்கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளான இவோன் பெர்னாண்டோ மற்றும் நிரோஷா பெர்னாண்டோ ஆகியோர், பூஜித மற்றும் நிலாந்தவின் அனுமதி கோரும் மனுக்களை இன்று நிராகரித்தனர்.

Exit mobile version