tamilnewsline

பெட்டிக்குள் மறைத்து 64 புறாக்கள் – கட்டுநாயக்கில் சிக்கிய சகோதரர்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் 64 புறாக்களைப் பெட்டிகளுக்குள் மறைத்து எடுத்துவர முயன்ற இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு சுங்க அதிகாரிகளால் 5 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்களே இவ்வாறு பிடிபட்டுள்ளனர். இவர்கள் சனிக்கிழமை (ஜூலை 25, 2026) எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK652 எனும் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு 7.15 மணியளவில் விமான நிலையத்தின் பசுமைப் பாதை (Green Channel) வழியே வெளியேற முயன்ற போது, சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனையிடப்பட்டனர். இதன்போது அவர்கள் கொண்டு வந்த 8 பயணப் பொதிகளுக்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, காற்று வசதியின்றிப் பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்ததால் அவற்றில் 8 புறாக்கள் உயிரிழந்திருந்தன. கைப்பற்றப்பட்ட புறாக்களின் மொத்தப் பெறுமதி 3,431,400 ரூபா எனச் சுங்கத் திணைக்களம் கணிப்பீடு செய்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுங்க விசாரணைகளின் பின்னர், ஒரு பயணிக்கு 400,000 ரூபாவும், மற்றைய பயணிக்கு 100,000 ரூபாவும் என மொத்தம் 500,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், உயிரோடு மீட்கப்பட்ட ஏனைய புறாக்களை உடனடியாக அவை கொண்டுவரப்பட்ட இத்தாலிக்கே மீண்டும் திருப்பி அனுப்புமாறும் சுங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version