tamilnewsline

மட்டக்களப்புக்கு சுத்தமான குடிநீர் வேண்டும்: நாடாளுமன்றத்தில் அழுத்தம்!

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதை தாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்தில் சில தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனவே, மாவட்டத்துக்கென்று தனித்துவமான திட்டமிடல் குழு ஒன்று அவசியமாகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்புக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தனியான திட்டமிடல் பிரிவு ஒன்றை நியமித்தால், அதன் ஊடாக சகல அபிவிருத்தி விடயங்களையும் ஒருங்கிணைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2017/2018 காலப்பகுதியில் பிரெஞ்சு அபிவிருத்தி முகவர் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தனையாறு கருத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இந்த திட்டம் மட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், கடந்த 18 மாதங்களாக குறித்த முகவர் நிறுவனம் இக்கருத்திட்டப் பணியை மீண்டும் தொடர முன்வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இந்த ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்படும்? அவ்வாறு கைச்சாத்திடப்பட்டால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகத்தில் முந்தனையாறு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க,

முந்தனையாறு கருத்திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை. குறித்த பிரெஞ்சு அபிவிருத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம்.

இந்த கருத்திட்டம் மிகவும் முக்கியமானது என்பதால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய புதிய திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version