tamilnewsline

நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் இருந்து மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரவு நெடுந்தீவை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் 11 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர், மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களது படகு தொடர்பான சம்பவம் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், இயந்திரக் கோளாறு காரணமாக படகு நெடுந்தீவு கரையோரத்தில் தரைதட்டிய நிலையில், சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாக்கு நீரிணைப் பகுதியை நம்பி வாழும் மீனவ சமூகத்தின் நிலைத்தன்மையையும் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இருதரப்பு தூதரக வழிமுறைகள் மூலம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version