Aivarree

மலையக அரசியல் தரப்புகள் :
அத்துமீறலைச் செய்வது ஒன்று அதனை வேடிக்கைப் பார்ப்பது இன்னொன்று

நுவரெலிய பிரதேச செயலக விடயம் குறித்து திலகர் கருத்து,

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு துணைபோகும் தரப்பாக அதனை அவர்களே கையிலெடுத்து நடைமுறைப்படுத்தும் தரப்பாக ஒரு தரப்பும், அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அரசியல் ரீதியாக முன்கொண்டு செல்லாதவர்களாக மறுதரப்பும் செயற்படும் நிலைமையையே மலையகத்தில் காண முடிகிறது.

இந்த நிலையில் அத்து மீறும் தரப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் மலையக அரசியல் அரங்கம் தலைமைகொடுத்து முன்செல்லும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக விடயத்தில் மாவட்ட மக்களின் மனித உரிமை மீறப்பட்டதாக வலியுறுத்தி மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தகவல் தருகையில்,

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு குறித்து பலகாலம் சமூக மட்டத்தில், நிர்வாக மட்டத்தில் பேசப்பட்டாலும் 2016 இதனைப் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைத்தன் பின்னரே அரசியல் மட்டத்தில் பேசுபொருளானது.

அதே போல அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தும், வர்த்தமானிப் பிரகடனம் ஊடாகவும் அதில் கணிசமான வெற்றியை அரசியல் ரீதியாக அடைய முடிந்தது. ஆனாலும் இன்று மலையக சமூகம் வென்றெடுத்த அரசியல் ரீதியான உரிமையை ஆளுந்தரப்பு மீறிச் செயற்பட்டு ஐந்து புதிய பிரதேச செயலகங்களுக்குப் பதிலாக இரண்டு உப காரியாலயங்களை மாத்திரம் வழங்கும்போது அவற்றை திறந்து வைத்து காட்டிக் கொடுக்கும் தரப்பாக ஒன்றும் , எதிர்த்தரப்பில் அமர்ந்து கொண்டு அதனைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கும்தரப்பாக இன்னொன்றுமாகத்தான் மலையக அரசியல் தரப்புகள் இருக்கின்றன.

இந்தநிலையில்தான் நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தினை கையில் எடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் செய்ய வேண்டிய பணிகளை மலையக அரசியல் அரங்கம் முன்கொண்டு செல்கிறது.

முதல் கட்டமாக நுவரெலியா மாவட்டம் முழுவதுமாக ஒரு மாத கால கையெழுத்து இயக்கத்தை நடாத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மக்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்து மனுவை மாவட்டச் செயலாளர் ஊடாக ஜனாதிபதி, பிரதமர், துறைசார் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அடுத்த கட்டமாக அந்த மனு குறித்த விபரங்களுடன் மாவட்டத்தின் பிரஜைகள் என்ற வகையிலும் மலையக அரசியல் அரங்கத்தின் சார்பிலும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளோம்.

இதற்கு முன்னதாக இதே விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ள சிவில் சமூக குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு எமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து உள்ளோம்.

எனினும் அரசியல் ரீதியாக பாரபட்சம் காட்டப்படும் இந்த விடயத்தினை அரசியல் ரீதியாகவே அணுகி வென்றெடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். பிரதேச செயலக விடயத்தில் அரசாங்கத்து ஆதரவாக நின்று அரச ஆணை அத்துமீறலை நடைமுறைப்படுத்தும் தரப்பாக ஒன்றும் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்ட எதிர் கட்சியில் அமர்ந்திருக்கும் தரப்பாக இன்னொன்றும் மலையக அரசியல் தரப்பாக மாறியுள்ள நிலையில் இந்த விடயத்தில் எதிர்கட்சியின் தலைமை வகிபாகத்தை மலையக அரசியல் அரங்கம் முன்கொண்டு செல்கிறது எனவும் தெரிவித்தார்.

Exit mobile version