பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைக்க விசேட அபிவிருத்தி நிதியம் அவசியம் – சாணக்கியன்

2 hours ago
Sri Lanka
(3 views)
aivarree.com

நாட்டில் நிலவும் பிராந்திய ரீதியான அபிவிருத்தி ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு தனியான விசேட அபிவிருத்தி நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான பொருளாதார, சமூக மற்றும் அபிவிருத்தி நிலைமையில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுவதால், மாவட்ட மட்டத்தில் அவற்றை அடையாளம் கண்டு பிரத்தியேகமான தீர்வுகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, மொனராகலை மற்றும் நுவரெலியா போன்ற பின்தங்கிய பிராந்தியங்கள் நீண்டகாலமாக பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும், சிவில் முரண்பாடுகள் மற்றும் வரலாற்று ரீதியான புறக்கணிப்புகள் அவற்றின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிராந்தியங்களில் ஒப்புரவுமிக்க மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன், பெண்களின் சமூக–பொருளாதார வலுவூட்டலையும் மேம்படுத்தும் நோக்கில் விசேட தேசிய முன்னெடுப்பு அவசியம் என சாணக்கியன் குறிப்பிட்டார்.

அவர் முன்வைத்துள்ள பிரேரணையின் கீழ், 10+2 ஆண்டு காலப்பகுதியில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்குடன் விசேட அபிவிருத்தி நிதியத்தை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்கம், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்திப் பங்காளிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் மனிதாபிமான கொடையாளர்களிடமிருந்து பங்களிப்புகளைப் பெற்று நிதியை வலுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் விவசாயம், மீன்பிடி, குடிசைக் கைத்தொழில், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், உட்கட்டமைப்பு, இளைஞர் திறன் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட துறைகளுக்கு ஆதரவு வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிதியின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டங்களைத் தயாரிப்பது முதல் நடைமுறைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு வரையான பணிகளுக்கு தொழில்நுட்ப உதவி வசதியொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதியம் மாற்றாக அமையாது எனவும், மாறாக நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிராந்திய மற்றும் மாவட்ட மட்டப் பிரச்சினைகளுக்கு மேலதிக வளங்களை திரட்டி விரைவான தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.

இந்தப் பிரேரணை தனிப்பட்ட நலனுக்கானது அல்ல என்றும், பின்தங்கிய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கும், சமமான அபிவிருத்தியை உறுதி செய்வதற்குமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.