சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றம் திட்டமிட்ட சீர்குலைப்பு முயற்சி? – அமைச்சர் ஆனந்த விஜேபால

2 hours ago
Sri Lanka
(3 views)
aivarree.com

நாட்டின் பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகள் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட சீர்குலைப்பு முயற்சிகளின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றியபோது, நீர்கொழும்பு, மஹர, பொரளை புதிய மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலேயே அண்மைய நாட்களில் அமைதியின்மை பதிவாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவங்களுக்கு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் உடனடி பின்னணியாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைதியின்மையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கைதிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகளைத் தவிர்த்தபடி சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதே அரசின் முதன்மை நோக்கம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் காலை உணவுக்குப் பின்னர் சுமார் 30 கைதிகள் கூரையின் மீது ஏறி உள்ளே செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளும் காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், தொடர்ச்சியாக பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களின் தன்மையைப் பார்க்கும்போது, அவை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சீர்குலைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தச் சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், சிறைச்சாலைகளில் இதுபோன்ற நிலைமைகளைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய, நீதி அமைச்சரின் தலைமையில் அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.