நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து ஆராய விசாரணைக் குழு நியமனம்

3 months ago
tamilnewsline.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல் இந்த குழு நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையிலான இக்குழுவில், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த விசாரணைக்குழுவின் செயலாளர் மற்றும் அழைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டீ. அசேல நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவினர் சிறைச்சாலை அமைதியின்மைக்கான பின்னணி மற்றும் காரணங்களை ஆராய்ந்து, அது குறித்த விரிவான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.