போதைப்பொருள் ஒழிப்பு: ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின் கீழ் செயற்பட ஜனாதிபதி உத்தரவு!

6 hours ago
Sri Lanka
(5 views)
aivarree.com

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்த தேசிய திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “ஒன்றிணைந்த தேசம்” தேசிய வழிநடத்தல் குழுவின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறைக்கைதிகளில் 70% பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதால், அவர்களுக்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், போதைப்பொருள் புனர்வாழ்வுக்கான புதிய சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவல் குறித்து தேசிய கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதற்கு கல்வி அமைச்சின் தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதுடன், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், பிள்ளைகள் போதைப்பொருள் பாவிப்பதைத் தனிப்பட்ட முறையில் பெற்றோர் சோதித்துப் பார்க்க, மருந்தகங்கள் ஊடாக போதைப்பொருள் பரிசோதனை கருவிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை உடனுக்குடன் அழிப்பதற்கான புதிய சட்டங்கள், நீதிமன்ற சான்றுப் பொருட்களை நிர்வகிக்க தானியங்கி முறைமை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்துதல் குறித்து ஆராயப்பட்டது.

கடல் மார்க்கமான கடத்தல்களைத் தடுக்க கடற்படை, காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்த கூட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யும் சட்ட அதிகாரம் வலுப்படுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.