நாட்டில் டெங்கு தீவிரம் – ஹோமாகம பேருந்து நிலையத்திற்கு அபராதம்

3 months ago
tamilnewsline.com

கொழும்பு – ஹோமாகம பேருந்து நிலையத்தை நுளம்பு பெருகும் வகையில் பராமரித்த குற்றச்சாட்டின் கீழ், நீதிமன்ற உத்தரவிற்கமைய 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து நிலையத்தில் பேருந்து பழுதுபார்ப்புப் பணிகளின் பின்னர் அகற்றப்பட்ட பழைய டயர்கள், இரும்புப் பொருட்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்குள் டெங்கு நுளம்பு இருப்பது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக பலமுறை எச்சரிக்கப்பட்டதுடன், முன்னதாக பொது சுகாதார பரிசோதகரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அதன் நிர்வாகத்தினர் தொடர்ந்து காட்டிய அலட்சியப்போக்கு காரணமாக, கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் அவ்விடங்களில் மழைநீர் தேங்கி, பெருமளவில் டெங்கு நுளம்பு பெருகி கடுமையான அவதான நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, பிட்டிப்பன பொது சுகாதார பரிசோதகர் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட திடீர் டெங்கு பரிசோதனையின் போது, மீண்டும் நுளம்புகள் நிறைந்த பல இடங்கள் அங்கு கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே, பொது சுகாதார பரிசோதகர்களால் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.