ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – கேரள கிரிக்கெட் சங்கத்தின் அதிரடி முடிவு

3 hours ago
SPORTS
(4 views)
aivarree.com

கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த 3 வருட தடையை ஏகமனதாக நீக்குவதற்கு கேரள கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராக ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாம் வெளியிட்ட கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதமொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

இன்று நடைபெற்ற விசேட பொதுக்குழு கூட்டத்தில் இந்த மன்னிப்புக் கடிதத்தை பரிசீலித்த கேரள கிரிக்கெட் சங்கம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு அனுமதி வழங்கியது.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரை எச்சரித்துள்ளது.

இந்தத் தடை நீக்கத்தின் மூலம், கேரள கிரிக்கெட் லீக் தொடரின் 3ஆவது சீசனில் ‘ஏரிஸ் கொல்லம் செய்லர்ஸ்’ அணியின் இணை உரிமையாளராக அவர் தொடர்ந்து செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த ஸ்ரீசாந்த், சர்வதேச ரீதியில் 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.