சினிமா

கனிமொழியிடம் சீறும் சின்மயி!! வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கூறும் நிலையில், நான் உட்பட 16 பெண்கள் வைரமுத்து மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக தேவையான நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை என்று பாடகி சின்மயி திமுக எம்.பி கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பினர். இதனை மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. மேலும், பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதையடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு, பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்புவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில், போக்சோ, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், ராஜகோபாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி, முகமது ஃபாருக் வீட்டில் இன்று காலை நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு ராஜகோபாலனை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, இந்த விவகாரம் மக்கள் வெளிச்சத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த பாடகி சின்மயி தனது ட்விட்டர் பதிவில் திமுக எம்.பி. கனிமொழி பத்மஷேசாத்ரி பள்ளி தொடர்பாக பதிவிட்டிருந்த ட்வீட்டை டேக் செய்து கூறியுள்ளதாவது, உண்மையிலேயே நீங்கள் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இதே போல் நான் உட்பட 16 பெண்கள் வைரமுத்து மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த விவகாரத்தில் நடிகர் ராதாரவி அவருக்கு நெருக்கமானவர்களும் தலையிட்டு தன்னை எந்த பணியும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பத்மசேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் தாங்கள், என்னுடைய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

news18

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button